“ஒருவனாக இருப்பதைவிட இரண்டு பேராக இருப்பது நல்லது. இரண்டு பேர் சேர்ந்து வேலை செய்தால், அவர்கள் தங்கள் வேலையிலிருந்து அதிகம் பெறலாம் (பிரசங்கி 4:9)”
வேதாகம கல்லூரி திருச்சபையின் ஓர் அங்கம் :
திருச்சபையும், வேதாகம கல்லூரியும் இரண்டும் தனித்தனி அமைப்புகள் அல்ல. வேதாகம கல்லூரியானது திருச்சபைக்கு வெளியே தனித்து செயல்படும் ஒரு அமைப்பு அல்ல. மாறாக, வேதாகம கல்லூரி என்பது, திருச்சபையின் பெரிதான பணிக்கு பங்களிக்கும் விதமாக, ஒரு குறிப்பிட்ட பணியை செய்யும் திருச்சபையின் ஒரு கரம் ஆகும். அதாவது அது திருச்சபையின் ஒருங்கிணைந்த ஓர் அங்கமாகும். ஒருவர் கையைப் பற்றி நினைத்தவுடன், நபரில்லாத வெறும் கையை மட்டும் கற்பனை செய்வதும் அல்லது கை இல்லாத நபரை கற்பனை செய்வதும் எளிதானது அல்ல. நாம் வேதாகம கல்லூரியை திருச்சபையின் ஊழியராக பார்க்கலாம். ஆனால் திருச்சபையின் ஓர் அங்கமாக அதைப் பார்ப்பதும், பேசுவதும் மிகவும் சிறந்தது. வேதாகம கல்லூரி திருச்சபையின் ஓர் அவயமாக, அங்கமாக இருந்தால், அவைகள் இரண்டும் இணைந்து செயல்பட வேண்டிய காரியங்கள் பல இருக்கின்றன. அதில் மூன்று காரியங்களை மட்டும் இங்கு சுருககமாக குறிப்பிட விரும்புகிறேன்.
இணைந்து ஜெபித்தல் :
முதலாவதாக, வேதாகம கல்லூரியானது திருச்சபையின் ஓர் அங்கமாக இருப்பதால், அதற்காக பாரத்தோடு ஜெபிக்க வேண்டியது திருச்சபையின் கடமையாகும். அதே போல வேதாகம கல்லூரியும் எந்த சரீரத்தில் அங்கமாக இருக்கிறதோ அந்த சரீரத்திற்கு ஜெபிக்க கடமைப்பட்டிருக்கிறது. தங்களுடைய ஸ்தல சபைக்காகவும், வார இறுதி நாட்களில் ஊழியம் செய்ய கடந்து போகும் சபைக்காகவும் போராடி ஜெபிப்பதற்குரிய தரிசனத்தையும், பாரத்தையும் மாணவர்களுக்குள் உருவாக்க வேண்டும். ஆனால் அதற்கும் மேலாக, வேதாகமக் கல்லூரிக்கு அருகில் உள்ள சபையின் போதகர் தன் சபையோடு வேதாகமக் கல்லூரிக்கு சென்று வேதாகம கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களோடு இணைந்து ஜெபிக்க வேண்டும். அதுபோல வேதாகம கல்லூரியின் ஊழியர்களும், மாணவர்களும் சுற்றியுள்ள சபைகளுக்கு சென்று சபையோடு இணைந்து ஜெபிக்க வேண்டும். இப்படி இணைந்து ஜெபிப்பதினாலே திருச்சபைக்கும், வேதாகம கல்லூரிக்கும் இடையிலே நல்ல ஐக்கியம் உருவாவதற்கும், அது பெலப்படுவதற்கும் உதவியாக இருக்கும். கூடி ஜெபித்தால் கோடி நன்மை என்பது ஞாபகத்திற்கு வருகிறது.
இணைந்து திட்டமிடுதல் மற்றும் செயல்படுதல் :
திருச்சபையும், வேதாகம கல்லூரியும் இணைந்து செய்ய வேண்டிய இரண்டாவது காரியத்தை நாம் பார்க்கலாம். இன்றைய திருச்சபையை பக்திவிருத்தியடைய செய்யும் அதே வேளையில், நாளைய திருச்சபைக்கு ஊழியர்களை பயிற்றுவித்து, ஆயத்தப்படுத்துவதற்கு வேதாகம கல்லூரி செயல்படுகிறது. திருச்சபை தன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு பங்களிக்கும் வகையில், வேதாகம கல்லூரியானது, சபையின் சார்பாக மாணவர்களை உருவாக்குகிறது என்ற உண்மை, கல்லூரியின் பாடத்திட்டங்களிலும், மாணவர்களின் ஆவிக்குரிய மற்றும் தனிப்பட்ட வாழ்கையின் வளர்ச்சிகாக செயல்படுத்தப்படும் திட்டங்களிலும், நடைமுறை ஊழிய பயிற்சி திட்டங்களிலும் ஒரு ஆழமான தாக்கத்தையும் ஏற்படித்தி, அதுதான் அவைகளை வடிவமைக்க வேண்டும். திருச்சபையின் நோக்கமும், இன்றைய தேவைகளும், சவால்களும் மனதில் கொள்ளப்படவேண்டும். அனுபவமுள்ள சபை போதகர்களின் பங்கேற்பும், பங்களிப்பும் அதில் இருக்கவேண்டும். வேதாகமக் கல்லூரியும், திருச்சபையும் ஒருங்கிணைந்து கூட்டமாக சிந்தித்து, திட்டமிட வேண்டும். திட்டமிடுவதில் மட்டுமல்லாமல், திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பணிகளிலும், அறிவும், அனுபவமும், ஆற்றலும் பெற்ற சபை போதகர்களின் பங்கேற்பு இருக்க வேண்டும். போதிப்பது, ஆலோசனைகள் கொடுப்பது, ஜெபம் நடத்துவது, பிரசிங்கிப்பது போன்ற ஊழியத்தை இன்னும் அதிக பலனுள்ளதாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.
இணைந்து உறவை காத்தல் :
திருச்சபையும், வேதாகம கல்லூரியும் இணைந்து செய்ய வேண்டிய மூன்றாவது காரியத்தை நாம் பார்க்கலாம். ஒரு திருச்சபை ஒருவரை வேதாகமக் கல்லூரிக்கு அனுப்பும்போது, அவர் கல்லூரிக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறுகிறார் என்பது பொதுவான உண்மை. ஆனால் அவர் தனது ஸ்தல சபையின் போதகரையும், சபையின் தரிசனத்தையும், ஊழியத்தையும் விட்டு வெளியேறுகிறார் என்பதும் உண்மை. இந்த பிரிவினால் ஸ்தல சபையில் அவருக்கு இருந்த ஈடுபாடும், அவரது பங்களிப்பும் இல்லாமல் போவது மட்டுமல்லாமல், ஸ்தல சபையோடு அவருக்கு இருந்த உறவுகளில், தொடர்புகளில் குறிப்பிடத்தக்க தளர்வும் ஏற்படுகிறது. சில நேரங்களில் இரண்டு அல்லது மூன்று வருடங்களின் முடிவில் மாணவர்களுக்கு ஸ்தல சபையுடன் இருந்த உறவு முற்றிலும் இல்லாமல் போய்விடுகிறது. வேதாகம கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தங்கள் சொந்த ஸ்தல சபையின் வாழ்க்கையில் பங்கேற்காத வழக்கத்தை வளர்த்துக் கொள்வார்கள் என்றால், அவர்கள் வேதாகமக் கல்லூரியை விட்டு வெளியேறிய பிறகு இதை மாற்றுவது கடினம். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் பொழுதே மாணவர்களுக்கும், அவர்களுடைய சொந்த ஸ்தல சபைகளுக்கும் இடையே நல்ல உறவையும், சபையின் தரிசனத்தில், ஊழியங்களில் அவர்களின் பங்கேற்பையும், பங்களிப்பையும் வளர்ப்பதற்கான பயனுள்ள வழிகளை கண்டுபிடிப்பதில், சபையும், கல்லூரியும் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும்.
இதற்கு இரண்டு ஆலோசனைகளை நான் பரிந்துரைக்க விரும்புகிறேன். மாணவர் ஒருவரை வேதாகம கல்லூரிக்கு அனுப்பியதோடு, அவரை அனுப்பிய திருச்சபையின் கடமை முடிந்து போவதில்லை. வேதாகம கல்லூரி இனி இவரை பார்த்துக்கொள்ளும் என்று எண்ணி சபையானது சும்மா இருந்துவிடக்கூடாது. ஸ்தல சபையின் போதகரும், பொறுப்பிலுள்ள விசுவாசிகளும் தங்கள் மாணவருடன் தொடர்ச்சியான தொடர்பைப் பேண வேண்டும். மற்றும் கல்லூரியில் அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கை , படிப்பு, நடைமுறை ஊழிய பயிற்சி, குணாதிசயங்கள் மற்றும் மற்றவர்களுடன் உள்ள உறவுகள் ஆகியவற்றில் அவரது முன்னேற்றம் குறித்து தொடர்ந்து கண்காணித்து, மேற்பார்வையிடவேண்டும். அதைப்போல், மாணவர்கள் தங்களுடைய சொந்த ஸ்தல சபைகளுக்கு ஒரு வழக்கமான அடிப்படையில் அடிக்கடி சென்று ஊழியங்களில் தீவிரமாக ஈடுபடுவதற்கு வழிவகுக்கும் வகையில் அதற்குரிய வாய்ப்புகளை வேதாகமக் கல்லூரி உருவாக்கவேண்டும். இப்படிச் செய்யும் பொழுது மாணவர்கள் தங்கள் சொந்த சபையின் உறவில், தரிசனத்தில், ஊழியத்தில் நிலைத்திருக்க, வளர உதவியாக இருக்கும்.
வரும் காலங்களில் திருச்சபையும், வேதாகம கல்லூரியும் இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் இன்னும் அதிகமாக இணைந்து செயல்பட்டு பரலோக இராஜ்ஜியத்தை பலமாய் கட்டி எழுப்பி, தேவ நாமத்தை இன்னும் அதிகமாய் மகிமைப்படுத்த தேவன் கிருபை பாராட்டுவாராக, ஆமேன்.