“ஒருவனாக எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம். (கொலோசெயர் 1:28)”
சபைக்குள் புதிதாய் வரும் ஒரு நபரை கிறிஸ்துவுக்குள் தேறினவனாக நிறுத்த வேண்டியது நமது கடமை. சபை விசுவாசிகள் ஒவ்வொருவரும் கீழ்காணும் நிலைகளில் எந்த நிலையில் உள்ளனர் என்பதை அடையாளம் காணுங்கள். அவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல தேவையான போதனை அல்லது பயிற்சி கொடுக்க தீர்மானியுங்கள்.
1. புது வருகையாளர் (New Comers) :
● முதல் முறை தயக்கத்துடன் ஆலயத்திற்கு வருகிறவர்கள்.
● இவர்கள் நமது ஆலயத்தின் விருந்தினர்.
● தொடர்ந்து இந்த சபைக்கு வரலாமா வேண்டாமா என மனதில் சிந்தித்துகொண்டிருப்பார்கள்.
● ஆலயத்திற்கும் வருவார்கள், மற்ற மத கோவில்களுக்கும் போவார்கள். தேவைப்பட்டால் மந்திரவாதிகள், குறி சொல்லுகிறவர்களையும் நாடுவார்கள்.
இவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல :
● இவர்களை சபையிலுள்ள யாராவது சந்தித்து அன்போடு விசாரிக்க வேண்டும்.
● சபை நடுவில் இவர்களை வரவேற்று தொடர்பு எண், முகவரி வாங்கலாம்.
● ஆராதனை முடிவில் இவர்களை குழுவாக அல்லது தனியாக உட்கார வைத்து சபை தலைவர்களில் யாராவது ஒருவர் சுருக்கமாக சுவிசேஷம் சொல்லலாம். இவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிக்கலாம்.
● 24 மணி நேரத்திற்குள் இவர்களை தொலைபேசியிலோ, நேரிலோ தொடர்புகொண்டு வருகைக்கு நன்றி சொல்லி விசாரிக்கலாம்.
2. விசுவாசி (Believer) :
● ஆண்டவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்கிறார்கள். இரட்சிக்கப்படுகிறார்கள்.
● இயேசுவைத்தவிர வேறு எந்த தெய்வத்தையும் வழிபட மாட்டார்கள்.
● ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வார்கள்.
● இரட்சிப்பின் அனுபவம் உள்ளவர்கள். ஆனால் அதைக் குறித்த வசன அறிவு இல்லாதவர்கள்.
● இவர்கள் கீழ்கண்ட காரியங்களில் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. எனவே கீழ்க்கண்ட காரியங்களிலிருந்து இவர்களை பாதுகாக்க வேண்டும்.
■ தவறான உபதேசம்
■ மற்ற சபை போதகர்கள்
■ இவர்கள் சந்திக்கிற சிறு சிறு பிரச்சனைகள்
■ பின்மாற்றம்
■ வேதத்தை தூக்கிக்கொண்டு வருகிறவர்கள் என்ன சொன்னாலும் நம்புவார்கள்.
இவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல
● இரட்சிப்பு, ஞானஸ்நானம், அபிஷேகம், சபை ஐக்கியம், ஆத்தும ஆதாயம், பாடுகளை சகித்தல், கொடுத்தல் போன்ற அடிப்படை சத்தியங்களை இவர்களுக்கு முறையாக போதிக்க வேண்டும். அதாவது சீஷத்துவ வகுப்பு நடத்த வேண்டும்.
3. சீஷன் (Disciple) :
● எந்த பாடு வந்தாலும் கிறிஸ்துவை விட்டு போகமாட்டார்கள்
● ஜெபம், வேத வாசிப்பில் ஓழுங்காக இருப்பார்கள்
● வேதாகமத்தின் அடிப்படை சத்தியங்களை அறிந்திருப்பார்கள்
● இவர்கள் தங்களது தாலந்து, திறமைகளை ஆண்டவருக்காக பயன்படுத்த ஆரம்பிப்பார்கள்.
● சபை ஊழியங்களில் உற்சாகமாக பங்கு பெறுவார்கள்.
இவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல
● ஆத்துமஆதாயம், சிறுவர், வாலிபர், கிராம ஊழியங்களைக் குறித்து பயிற்சி கொடுக்க வேண்டும்.
4. சபை ஊழிய பொறுப்பாளர் அல்லது தலைவர் (Lay leader)
● ஆத்தும ஆதாயம் செய்கிறவர்கள்
● சீஷர்களை உருவாக்குகிறவர்கள்
● வாலிபர், சிறுவர், கிராம ஊழிய இலாக்காக்களுக்கு பொறுப்பாளர்கள்
● முதிர்ச்சியுள்ள விசுவாசிகள்
இவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல :
● பாடல் நடத்த, ஆராதனை நடத்த, ஜெபம் நடத்த, பிரசங்கம் பண்ண, ஆலோசனை கொடுக்க.. போன்ற காரியங்களில் பயிற்சி கொடுக்க வேண்டும்.
● வீட்டு சபை பயிற்சி, விரிவு வேதாகம மைய பயிற்சி, வேதாகம கல்லூரி, ஐகாம் வேதபாட பயிற்சி போன்றவற்றிற்கு தேவைக்கேற்ப அனுப்பலாம்.
5. முழு நேர அல்லது பகுதி நேர ஊழியர் (Full Time or Part Time Minister) :
● அதிகாலை மற்றும் உபவாச ஜெபம் போன்ற ஜெபங்களை நடத்துவார்
● பிரசங்கம் பண்ணுவார்
● கிளை சபை ஊழியம் செய்வார்
மக்களை கொண்டு வருவோம், கட்டி எழுப்புவோம், பயிற்றுவிப்போம், தேவையுள்ள இடங்களுக்கு அனுப்புவோம். ஆமென்.